அமலாக்கத்துறை வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவரது நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில், எம்.எல்.ஏ மற்றும் எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை ஆஜர்படுத்தியது.
நீதிபதி ரவியின் அறையில் நேரில் ஆஜரான செந்தில் பாலாஜியிடம், 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றபத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி, இனி நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், காணொலி காட்சி வாயிலாக ஆஜராகலாம் எனவும் கூறினார்.
மேலும், ஜாமின் மனுவை தன்னால் விசாரிக்க முடியாது என்றும், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடவும் அனுமதி அளித்தார். இதனையடுத்து, அமைச்சர் செந்தில் பாலாஜி பலத்த போலிஸ் பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கோரி விரைவில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடுவோம் என அவரது தரப்பு வழக்கறிஞர் பரணி குமார் தெரிவித்துள்ளார். சிறப்பு நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீதிபதியிடம் கால் மரத்துப் போவதாக செந்தில்பாலாஜி கூறியதாக குறிப்பிட்டார்.
