நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற சபதம் எடுப்போம் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்கள், அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் என 320 உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
தலைமை கழகச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பிற மாநிலச் செயலாளர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைக் கழக மகளிர் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் செயற்குழு கூட்டத்தில் கலந்துக்கொண்டனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் முதல் செயற்குழுக்கூட்டம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த கூட்டம் நடைபெற்றது.
அதிமுக செயற்குழு கூட்டத்தில் மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி மதுரையில் அதிமுக மாநாடு நடத்தப்படும் என்றும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றப் பொதுத் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற சபதம் எடுப்போம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்தும் நன்றியும் தெரிவித்து செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கர்நாடக தேர்தல் குறித்து முடிவெடுக்கும் உரிமையும் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதிய மகேந்திரா ஸ்கார்பியோ காரை வழங்கினார்.
ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த பொழுது அப்போதைய அவைத் தலைவர் மதுசூதனனுக்கு இனோவா கார் வழங்கப்பட்டது.