மகாராஷ்டிராவில் சிவ சேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. இந்நிலையில் மூத்த அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் தனது கட்சிக்கு எதிராக திரும்பினார். அவர் எம்எல்ஏக்களை தன் பக்கம் இழுத்த அவர், பாரதிய ஜனதாவுடன் இணைந்து மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றினார்.
அதன்பிறகு சிவசேனா கட்சியின் பெயர் மற்றும் அக்கட்சியின் சின்னமான வில் மற்றும் அம்பு சின்னத்துக்கு ஷிண்டே தரப்பு உரிமை கோரியது. கட்சியின் பெரும்பான்மை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் தன்பக்கம் இருப்பதால் தனது அணிக்கு ஒதுக்கும்படி ஷிண்டே கோரினார். இதற்கான கடிதத்தையும் தேர்தல் ஆணையத்திடம் வழங்கினார்.
உத்தவ் தாக்கரே தரப்பு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தேர்தல் ஆணையத்திடம் தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று வாதத்தை முன்வைத்தது. இருதரப்பு விளக்கங்கள், ஆவணங்கள் மற்றும் கட்சி விதிகளை பரிசீலனை செய்த தேர்தல் ஆணையம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு சிவ சேனா கட்சியின் பெயரையும் வில், அம்பு சின்னத்தையும் ஒதுக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவுக்கு உத்தவ் தாக்கரே தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக உத்தவ் தாக்கரே ஆதரவாளர் ஆனந்த் துபே கூறுகையில், “தேர்தல் ஆணையத்தில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று கூறி வந்தோம். நாங்கள் சந்தேகித்தபடி தற்போது உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நீதிமன்றம் இறுதி முடிவு எடுக்காத நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அவசரம், பாஜகவின் முகவராக ஆணையம் செயல்படுவதைக் காட்டுகிறது. இதைக் கண்டிக்கிறோம்” என்று கூறினார்.