சுற்றுலாத் துறையை மேம்படுத்த ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விசா இல்லாத பயணம், பயண செலவில் சலுகை, புதிய புதிய சுற்றுலாத் தலங்கள் என உலக நாடுகள் எல்லாம் தங்கள் வருமானத்தை பெருக்குவதற்கு பல வழிகளைத் தேடிக்கொண்டு இருக்கிறது.
அதே போல விமான சேவை நிறுவனங்களும் தங்கள் பங்கிற்கு புதிய புதிய ஆஃபர்களை அறிமுகம் செய்து வருகிறது. பயணத்தோடு கூடிய சுற்றுலா பேக்கேஜ், சலுகை விலையில் பயணம் என்ற பலவற்றை நாம் கடந்து வந்திருப்போம். ஆனால் துபாய் பயணம் செய்தால் இலவச ஹோட்டலில் தங்கலாம் என்ற செம ஆஃபர் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
பொதுவாக விமானத்தில் பயணம் செய்து ஒரு நாட்டிற்கு போனாலோ அல்லது மற்றொரு விமானத்திற்கு காத்திருந்தாலோ அந்த நேரத்தில் ஓய்வெடுக்க நாம் தான் தனியாக அறை எடுத்து தங்க வேண்டும். ப்ரீமியம் பயண அட்டைகளை வைத்திருந்தால் அதன் மூலம் லாவுஞ் வசதிகளை பெறலாம். இல்லை என்றால் நாற்காலியில் தான் தூங்க வேண்டும்.
ஆனால் இப்போது துபாய்க்கு வரும் அல்லது துபாயில் வந்து விமானம் மாறும் மக்களுக்காக எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் இலவச தங்கும் வசதியை வழங்குகிறது. ஆனால் இது குறிப்பிட்ட காலத்திற்கான ஆஃபர் தான். மே 26 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான பயணத் தேதிகளில் பயணிக்கும் பயணிகளுக்குத் தான் இது பொருந்தும்.
துபாய்க்கு செல்லும் பயணிகளுக்கும், 24 மணி நேரத்திற்கும் மேலாக நேரம் மாற்று விமானத்திற்காக துபாயில் காத்திருந்து விமானம் ஏறும் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் இந்த சலுகை செல்லுபடியாகும் என்று விமான நிறுவனத்தின் அறிக்கைகள் கூறுகின்றன.
இதற்கான முன்பதிவு காலம் மே 22 முதல் தொடங்கிவிட்டது. மேலும் இந்த சலுகை பெறுவதற்கான டிக்கேட் ஜூன் 11, 2023 க்குள் எடுக்கப்பட வேண்டும். ஜூன் 11 வரைதான் இந்த சிறப்பு சலுகைக்கான போர்ட்டல் திறந்திருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. பயணிகள் பயணிக்கும் இருக்கை வகைக்கு ஏற்ப தாங்கும் விடுத்தது வசதிகள் வழங்கப்படும்.
முதல் வகுப்பு அல்லது வணிக வகுப்பில் எமிரேட்ஸ் ரிட்டர்ன் டிக்கெட்டை வாங்கும் அல்லது துபாயில் மாறும் பயணிகளுக்கு, ஹோட்டல் துபாய் ஒன் சென்ட்ரலில் இரண்டு இரவு தங்கும் வசதி கிடைக்கும். இந்த ஹோட்டல் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. துபாயின் பிரபல அருங்காட்சியகத்தை எளிதாக இங்கிருந்து அணுகலாம். பயணிகள் விமான நிலையத்திற்குச் செல்வதற்கும் திரும்புவதற்கும் வாகன சேவையைப் பெறுவார்கள்.
பிரீமியம் எகானமி கிளாஸ் அல்லது எகானமி வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு துபாயில் உள்ள நோவோடெல் வேர்ல்ட் டிரேட் சென்டரில் ஒரு இரவு தங்கும் வசதியையும் விமான நிறுவனம் வழங்குகிறது. இந்த ஹோட்டல் துபாய் சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தில் (DWTC) அமைந்துள்ளது.
இதற்கான முன்பதிவுகளை emirates.com, எமிரேட் விமான டிக்கெட் புக்கிங் அலுவலகங்கள், எமிரேட்ஸ் கால் சென்டர் அல்லது பயண முகவர்கள் மூலம் செய்துகொள்ளலாம். அதே போல மற்றொரு முக்கிய விஷயம். துபாய் வருவதற்கு குறைந்தபட்சம் 96 மணிநேரம் முன்பு அறைகளுக்கான முன்பதிவு செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.