8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில் இன்று அடிலெய்டு ஓவலில் நடந்த 2-வது அரைஇறுதியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்ற நிலையில், அந்த அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. இந்திய அணியில் மாற்றம் ஏதும் செய்யாமல் ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய வீரர்களே இடம் பிடித்துள்ளனர்.
தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 5 ரன்களில் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்து கேப்டன் ரோகித் ஷர்மாவும் 28 பந்துகளில் 27 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறி மறுபடியும் ஏமாற்றம் அளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 14 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
பொறுப்பாக விளையாடிய விராட் கோலி அணியை சரிவில் இருந்து மீட்டார்.39 பந்துகளில் அரைசதம் அடித்ததார். ஆனால் அரைசதம் அடித்த கையோடு விராட் கோலி கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். மறுபக்கம் பவுண்டரிகளை பறக்கவிட்ட ஹர்திக் பாண்டியா 29 பந்துகளில் அரைசதம் கடந்தார்.
ஹர்திக் பாண்டியாவின் அதிரடியால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்துள்ளது. ஹர்டிக் பாண்டியா 33 பந்துகளில் 63 ரன்கள் விளாசினார். இதை தொடர்ந்து 169 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக களம் புகுந்த அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் பவர்பிளே முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்களை குவித்தது. சிக்சர் மழை பொழிந்த ஹேல்ஸ் 28 பந்துகளில் 5 சிக்சர்களுடன் அரைசதம் கடந்தார். இந்திய பந்துவீச்சாளர்கள் எவ்வளவு முயன்றும் இவர்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த ஜோடியின் அதிரடியால் இங்கிலாந்து அணி 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 98 ரன்களை குவித்தது. ஹேல்ஸை தொடர்ந்து கேப்டன் பட்லர் 36 பந்துகளில் அரைசதம் கடந்தார். இந்த ஜோடி 13.5 ஓவர்களில் 150 ரன்கள் பாட்னர்ஷிப்பை கடந்தனர்.
இறுதியில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் 170 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. அலெக்ஸ் ஹேல்ஸ் 86 ரன்களுடனும் (47 பந்துகள்) , ஜோஸ் பட்லர் 80 ரன்களுடனும் (49 பந்துகள்) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். நவம்பர் 13 அன்று நடைபெறும் இறுதி போட்டியில் பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.