
- This event has passed.
வடஅமெரிக்கத் தமிழர்களின் சிறுகதைப் போட்டி அழைப்பு!
January 3 @ 8:00 am - March 31 @ 5:00 pm
தாயின் மடியில் தலை சாய்த்துப் பல கதைகள் கேட்டதுண்டு, தாய்த் தமிழும் தன்னிகரில்லாத சங்க இலக்கியமும் பல கதைகள் நமக்குச் சொல்லியதுண்டு. இப்படிச் சங்ககாலம் முதல் சமகாலம் வரை மக்களின் வாழ்ந்த வாழ்க்கையையும், வரலாற்றையம் கதைகளாய்த் தமிழர்கள் நாம் கடத்தி வந்துள்ளோம்.
மனிதன் தான் இருக்கும் இடத்தின் வாழ்வியலை விளக்கி எழுதும் கதைகள் அங்கு வாழும் மக்களுக்கும், அந்தக் கதைகளைப் படிக்கும் மக்களுக்கும், அந்தப் புலம்பெயர்ந்த மக்கள் புது இடத்தில் தங்களை எப்படி நிலைநாட்டுகிறார்கள், புதிய காலநிலை, சூழல், மொழி, உணவு, உடைகள், மற்றும் பண்பாடு இவற்றோடு எப்படி ஒத்துப் போகிறார்கள் இல்லை கலக்கிறார்கள், இல்லை இணைய முடியாமல் தவிக்கிறார்கள் எனப் பதிவு செய்யும். மேலும் அந்த மக்கள் வாழ்ந்த வாழ்கை முறை, பண்பாட்டு இணைவுகள், சிதைவுகள், மாற்றங்கள் என அனைத்தையும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் இந்தக் கதைகள் பின் வரும் எதிர்கால தலைமுறையினருக்கு உணர்த்தும்.
சம கால மக்களுக்கு மட்டுமின்றி நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு படிக்கும் மக்களுக்கும் தென்னிந்தியாவின் கோடியில் உள்ள தமிழ்நாட்டிலிருந்து வந்த தமிழ் மக்கள் எங்கெல்லாம் திரைகடலோடினார்களோ அங்கெல்லாம் அவர்களது பண்பாடும், தமிழர்களின் அறமும் பிற நாட்டோடு எப்படிக் கலந்தன, மற்றொரு மொழி, இன மக்களோடு எப்படி அவர்கள் தங்கள் வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர் என விளக்கும். அப்படியான ஒரு இலக்கியச் சான்றாக இச்சிறுகதைகள் அமைய வேண்டும். அதற்குப் புலம்பெயர்ந்த இடத்தையும், மக்களையும் மையப்படுத்தி எழுதும் கதைகள் நிறைய உருவாக வேண்டும்.
அதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க சீரிய முயற்சியே நமது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் சிறுகதைப் போட்டி அழைப்பு.
இதில் நீங்களும் கலந்துக் கொண்டு வடஅமெரிக்காவில் வாழும் தமிழர்களின் வாழ்நிலை, சமூகநிலை, தமிழர் வரலாற்று நிகழ்வுகள், பயண அனுபவங்கள், வாழ்க்கை குறித்த பட்டறிவுகளைப் பதிவு செய்யுங்கள்.
இதன் மூலம் என்றோ ஒருநாள், இன்னும் பல நூறு ஆண்டுகள் கழித்து இதனைப் படிக்கும் யாவர்க்கும் நாம் நம் வாழ்வியலைப் பதிவு செய்து அவர்களின் மனக்கண்ணில் நேற்றைய காட்சிகளைக் கொண்டு சேர்க்க இயலும்.
வாருங்கள்! வரலாற்றையும், வாழ்க்கையையும் பதிவு செய்வோம் சிறு கதைகளாய்!
விதிமுறைகளுக்கு – https://fetna.org/ilakkiya-kulu/pottigal