தமிழர் நாகரிகம் மற்றும் வாழ்வியல் முறையை அறிந்தக் கொள்ள பலகட்ட அகழ்வாராய்ச்சிகள் பல இடங்களில் நடைபெற்றன, தற்போதும் நடைபெறுகின்றன. அதில் வரலாற்றுச் சிறப்புமிக்க பல பொருட்கள், உலோகங்களால் ஆன ஆபரணங்கள், சாதனங்கள் மற்றும் சுடுமண் பானைகள், தாழியென பல விஷயங்கள் கிடைத்தன.
அதனால் பல ஊர்களில் பண்டையத் தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்ட இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் தொடங்கின. இதில் சமீபத்தில் காஞ்சிபுரத்தில் ஸ்ரீபெரும்பதூர் அருகேயுள்ள வடக்கப்பட்டு என்ற கிராமத்தில் 1.6கி தங்கத்தாலான அணிகலன் மற்றும் சுடுமண் வட்ட சில்லுகள், சுடுமண் காதணிகள் என பலப் பொருட்கள் கிடைத்துள்ளன. இதுபோக,
கொந்தகையில் அகழாய்வு :
தற்போது நடைபெற்று வரும் 8-ம் கட்ட அகழாய்வில் 57 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் முழுமையாக சேதமடையாமல் ஒருசில தாழிகள் மட்டுமே உள்ளன. அவற்றில் உள்ள பொருட்களை மட்டும் மரபணு சோதனை செய்ய தமிழக தொல்லியல் துறை முடிவு செய்துள்ளது. கடந்த மாதம் தாழி திறக்கப்பட்டு, அதில் உள்ள எலும்புகள் மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது
123-வது தாழி திறப்பு :
இந்நிலையில், தமிழக தொல்லியல்துறை ஆய்வாளர்கள் நேற்றிரவு, 123-வது தாழியை திறந்தனர். நான்கரை அடி உயரமுள்ள தாழியினுள் சிதலமடைந்த மண்டை ஓடும், கை, கால் எலும்புகளும் கிடைத்துள்ளன. இதுவரை தாழிகளினுள் மண்டை ஓடு, சுடுமண் பானைகள், இரும்பு ஆயுதம் உள்ளிட்டவை மட்டும் கண்டறியப்பட்டன.
தாழியினுள் நெல் மணிகள் :
தற்போது முதல்முறையாக முதுமக்கள் தாழியினுள் நெல் மணிகள் கண்டறியப்பட்டுள்ளன. இறுகிப் போன நிலையில் கிடைத்துள்ள இந்த நெல்மணிகள் ஆய்வு செய்யப்பட உள்ளன. இதேபோல், முதல் முறையாக தாழிகளினுள் சுடுமண் பாத்திரங்களும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2,600 ஆண்டுகளுக்கு முந்தைய தாழிகள் :
இதுகுறித்து தொல்லியல் துறையினர் தெரிவிக்கையில், இந்த தாழிகள் 2,600 ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கக்கூடும். இந்த தாழிகள், ஒரு அந்தஸ்தாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். தாழியினுள் உள்ள பொருட்களை வைத்து இறந்தவர்களின் மதிப்பையும் அறிய முடிகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள தாழியினுள் 6 சுடுமண் பாத்திரங்கள் உள்ளிட்ட 19 பொருட்கள் கிடைத்துள்ளன.
மதிப்பு மிக்கவர் :
தாழியினுள் அதிகளவு பாத்திரங்கள் இருப்பதாலும், நெல் மணிகள் இருப்பதாலும் இவர் செல்வந்தவராகவோ அல்லது மதிப்புமிக்கவராகவோ இருந்திருக்கக்கூடும். மேலும், முகத்தின் கீழ்தாடை பற்கள் கிடைத்துள்ளன. மொத்தம் 16 பற்கள் உள்ளன. பற்கள் அனைத்தும் வலுவானதாக இருந்திருக்கும். தாழியினுள் புதைக்கப்பட்டவர்கள் நல்ல திடகாத்திரமான, வலுவான உடலமைப்பை கொண்டவராக இருந்திருக்கலாம் என தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். இந்த மாதத்துடன் பணிகள் நிறைவு பெற உள்ளதை அடுத்து, தாழிகள் அனைத்தையும் திறந்து ஆய்வு செய்ய தொல்லியல் துறையினர் திட்டமிட்டு, அதற்கான பணிகளை விரைவுப்படுத்தி வருகின்றனர்.
சிறப்பு…இதுபோன்ற தொல்லியல் துறையின் சிறப்பான அகழ்வாராய்ச்சிகள் குறித்த கட்டுரைகள் தமிழரின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ள முடிகிறது. nri தமிழ் வலைத்தளத்துக்கு மிக்க நன்றி.