சமீப காலமாக பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடந்து வருகிறது. குறிப்பாக, உலக அளவில் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் வேலை நீக்கம் என்ற செய்தியையும் பார்த்து வருகிறோம். இணைய சேவைகள், ஆன்லைன் சேவைகள், OTT பொழுதுபோக்கு என்று எல்லா தேவைகளுமே அதிகரித்துள்ள நிலையில், ஏன் ஆட்குறைப்பு என்ற கேள்வியும் எழுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, ஃபேஸ்புக் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு கணிசமாக சரிந்து, அதன் நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பும் குறைந்தது.
இந்நிலையில், ஃபேஸ்புக் தளத்தின் தலைமை நிறுவனமான மெட்டாவிற்கு, அதனுடைய பங்குதாரர்களிடம் இருந்து புதிய கெடுபிடிகள் கூறப்பட்டுள்ளன. மெடா நிறுவனம் பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்டிமீட்டர் கேபிடல் மேனேஜ்மென்ட் என்ற நிறுவனம் ஃபேஸ்புக்கின் தலைமை நிறுவனமான மெட்டாவின் பங்குதாரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் சமீபத்தில் ஃபேஸ்புக்கின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸுக்கர்பெர்கிற்கு ஒரு அறிக்கையை அளித்துள்ளது.
இதில் மெட்டாவில் ஆட்குறைப்பு செய்ய வேண்டும் என்றும், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு பகிரங்கமான ஒரு அறிவிப்பை வெளிப்படுத்தியதற்கு என்ன காரணம் என்று இங்கே பார்க்கலாம்.