திருப்பதி தேவஸ்தானம் பெயரில் தொடங்கப்பட்டுள்ள 41 போலி இணையதளங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது. திருப்பதி தேவஸ்தானம் என்ற பெயரில் போலி இணையதளத்தை சிலர் தொடங்கி மோசடி செய்து வருவதாக தேவஸ்தானத்திற்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் போலீசார் அதனை கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் அதேபோல் தற்போது மற்றொரு போலி இணையதளம் தொடங்கி பக்தர்களை ஏமாற்றி வருவதை தேவஸ்தான தகவல் தொடர்பு அதிகாரிகள் கண்டறிந்தனர். இதுகுறித்து திருமலை முதலாவது நகர காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்து. அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த வழக்கு ஆந்திர பிரதேச
தடயவியல் சைபர் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலி இணையதளம் குறித்து சைபர் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் https://tirupatibalaji.ap.gov.in/ என்று உள்ள நிலையில், சிலர் சிறிய மாற்றங்கள் செய்து (https://tirupatibalaji:ap:gov.org/)என்ற இணையதளத்தை உருவாக்கி மோசடி செய்வது அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் மற்றும் அறைகளை முன்பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதுதவிர, TTDevasthanams என்ற மொபைல் தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலியையும் பயன்படுத்தலாம் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.