குஜராத் தேர்தல் 2022 – முதற்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள்

குஜராத்தில் நேற்று 89 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட தேர்தலில் 60.23 சதவீத ஓட்டுகள் பதிவானது. கடந்த 2017 ஆண்டை ஒப்பிடும்போது 6 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. இதற்கிடையே 93 சட்டசபை தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று 50 கிலோமீட்டருக்கு திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்தார்.
குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு பாஜக தொடர்ந்து 27 ஆண்டுகள் ஆட்சியில் உள்ள நிலையிலும், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத் தேர்தல் அனைவரின் கவனத்தையும் பெற்றது.
இந்நிலையில் முதற்கட்டமாக நேற்று நடந்த குஜராத் தேர்தலில் மொத்தம் 60.23 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. அதிகபட்சமாக நர்மதா மாவட்டத்தில் 73.02 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி உள்ளது. இதற்கு அடுத்தபடியாக தாபி மாவட்டத்தில் 72.32 சதவீத ஓட்டுக்களும், சூரத், ராஜ்கோட் உள்பட 8 மாவட்டங்களில் 60 சதவீதத்துக்கும் அதிகமான ஓட்டுக்கள் பதிவானது குறிப்பிடத்தக்கது. குஜராத்தில் கடந்த 2017 ல் நடந்த முதற்கட்ட தேர்தலில் 66.75 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. ஆனால் நேற்றைய முதற்கட்ட தேர்தலில் 60.23 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளது. முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது இது குறைவாக அமைந்துள்ளது.
குஜராத் முதற்கட்ட வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. எந்த இடங்களிலும் பிரச்சனைகள் ஏற்படவில்லை. சில இடங்களில் மட்டும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதாகின. பல இடங்களில் பழுதுகள் உடனடியாக சரிசெய்யப்பட்ட நிலையில் சில பகுதிகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மாற்றம் செய்யப்பட்டன. இதுதவிர தேர்தலில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *