ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரின் 22-வது பதிப்பு கத்தார் நாட்டில் இன்று கோலாகமாக தொடங்குகிறது. இதன் மூலம் வரலாற்றில் முதன் முறையாக உலககோப்பை கால்பந்து தொடரை நடத்தும் முதல் மத்திய கிழக்கு நாடு என்ற வரலாற்று பெருமையை கத்தார் பெறுகிறது. டிசம்பர் 18-ம் தேதி வரை நடைபெறும் இந்த கால்பந்து திருவிழாவில் 32 அணிகள் கலந்து கொண்டுள்ளன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் ‘ஏ’-ல் போட்டியை நடத்தும் கத்தாருடன், ஈக்வடார், செனகல், நெதர்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
போட்டியை காண 12 லட்சம் ரசிகர்கள் கத்தாருக்கு வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்கு தங்கும் விடுதிகள், மிதக்கும் ஓட்டல்கள், பாலைவனத்தில் பிரத்யேக கூடாரங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் ஒரு மாதம் நடைபெற உள்ள கால்பந்து திருவிழாவுக்காக கத்தார் சுமார் 220 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவழித்துள்ளது. இவற்றில் பெரும் தொகை உள்கட்டமைப்பு வசதிகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடரில் சாம்பியன் கோப்பையை தட்டிச்செல்லும் அணிக்கு இந்திய மதிப்பில் ரூ.342 கோடி பரிசாக கிடைக்கும். இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.244 கோடியும், மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடிக்கும் அணிக்கு முறையே ரூ.219 கோடியும், ரூ.203 கோடியும் பரிசாக வழங்கப்படும்.
கால்பந்து திருவிழாவின் தொடக்க விழா இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு அல்பேத் மைதானத்தில் கோலாகமாக துவங்கியது. விழாவில் தென் கொரியாவைச் சேர்ந்த பிரபல பாடகர் ஜங்குக் கலந்து கொண்டு பாட உள்ளார். இதைத் தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தார் – ஈக்வேடார் அணிகள் மோதின.
தரவரிசையில் 50-வது இடம் வகிக்கும் கத்தார் போட்டியை நடத்தும் நாடு என்பதால் உலகக் கோப்பைக்கு நேரடியாக தகுதி பெற்றது. ஈக்வேடார் அணி தரவரிசையில் 44-வது இடம் வகிக்கிறது. இந்த தொடரின் அனைத்து ஆட்டங்களையும் ஸ்போர்ட்ஸ் 18 நேரடி ஒளிபரப்பு செய்கிறது.