அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர் செல்வமும், பன்ரூட்டி ராமச்சந்திரனும் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச் செல்வம் இணைந்து அ.தி.மு.கவை வழிநடத்திவந்தனர். இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி கட்சி முழுவதையும் எடப்பாடி பழனிசாமி அவரது கட்டுப்பாட்டுக்கு கொண்டுவந்தார். கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களாக மாறினர்.
அதனையடுத்து, பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை அறிவிப்பைக் கொண்டுவருவதற்கு எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்தார். ஓ.பன்னீர் செல்வத்தின் கடுமையான எதிர்ப்பையும் மீறி பொதுக்குழுக் கூட்டம் நடத்தி பொதுச் செயலாளராக பதவியேற்றார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வுசெய்யப்பட்டதையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதேநேரம், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு செய்துள்ளார். இதற்கிடையில் மக்கள் மத்தியிலும் தனது செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார்.
கடந்த இருவாரத்துக்கு முன்னதாக திருச்சியில் மாபெரும் மாநாடு ஒன்றை ஓ.பன்னீர் செல்வம் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக சேலத்திலும் மாநாடு நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமியால் ஓரம் கட்டப்பட்டவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஓ.பன்னீர் செல்வம் ஈடுபட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமியால் ஓரம் கட்டப்பட்ட டி.டி.வி.தினகரன், சசிகலாவை ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பாரா என்று கேள்வி நீண்ட காலமாக இருந்து வந்தது.
இந்தநிலையில், இன்று திடீரென்று டி.டி.வி.தினகரனை சந்திக்கும் முடிவை ஓ.பன்னீர் செல்வம் எடுத்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, ஓ.பன்னீர்செல்வமும் பண்ருட்டி ராமச்சந்திரன் ஒன்றாகச் சேர்ந்து தினகரனின் அடையார் இல்லத்துக்கு சென்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
