தமிழ்நாட்டில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் வளாகத்தில் I-T ரெய்டுகள் இரண்டாவது நாளாக தொடர்கின்றன.திங்களன்று, ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களுடன் தொடர்புடைய 50 க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடங்கினர்.
தமிழகம் முழுவதும் தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக, சென்னை, கோவை, திருச்சி, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித் துறையினர் திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர்கள் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு (திமுக) நெருக்கமானவர்கள் என்று கூறப்படுகிறது.
திமுக எம்எல்ஏ மு.க.மோகன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தமிழக முதல்வருக்கும் ஸ்டாலினின் மருமகன் வி.சபரீசனுக்கும் நெருங்கிய நம்பிக்கைக்குரியவராக கருதப்படுபவர் எம்எல்ஏ மோகன் எனக் கூறப்படுகிறது. ஐடி வட்டாரங்கள் இந்த ரெய்டுகளை உறுதி செய்துள்ளன.
“சோதனைகள் தொடர்கின்றன. இந்த கட்டத்தில் நாங்கள் எதையும் வெளியில் பகிர முடியாது, ”என்று ஒரு ஐடி அதிகாரி கூறினார். வரி ஏய்ப்பு எப்பொழுது நிகழ்ந்தது? எவ்வளவு வரி ஏய்ப்பு நடந்துள்ளது? போன்ற வினாக்களுக்கு இன்னும் பதில்கள் பகிரப்படவில்லை.
கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் கே.அண்ணாமலை, ஜி ஸ்கொயர் நிறுவனத்துடன் திமுகவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், அதனால்தான் தற்போதைய ஆட்சியில் இருந்து ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் வருமானம் அதிகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
திமுக தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரின் சொத்துக்களைக் கூறுவதாகக் கூறப்படும் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட்டார், அதை அவர் ‘திமுகவின் கோப்புகள்’ என்று பெயரிட்டுள்ளாதாகவும் கூறினார். அண்ணாமலைக்கு திமுக பலமுறை வக்கீல் நோட்டீஸ் அனுப்பி, அவர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்து வந்தது.
மாநில பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி திங்களன்று “ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நடைபெறும் சோதனைகள் அண்ணாமலையின் குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்கும்” என்று ட்வீட் செய்தார்.
அதே நாளில் அவர் ThePrint பத்திரிக்கையிடம் அவர் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள குழந்தைக்கு கூட தெரியும், G-Square நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது இந்த அரசாங்கத்தின் போது மட்டுமே ஆக்ரோஷமாக வளர்ந்துள்ளது. மோகன் எம்.எல்.ஏ.வுக்கும், சபரீசனுக்கும் உள்ள நெருக்கமும் தெரியும். முதல் அமைச்சர் குடும்பத்தின் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நிறுவனம் ஆக்டோபஸாக மாறியுள்ளது” என்று கூறியுள்ளார்.