ஜி 20 மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, ஜி 20 நாடுகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் தொடங்கியது. இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன், பிரேசில் உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஜி20 மாநாடு நடைபெறும் பாரத் மண்டபத்திற்கு வருகை தந்த உறுப்பு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி வரவேற்றார். மாநாட்டு அரங்கில் பிரதமர் மோடியின் இருக்கைக்கு முன், இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பொறிக்கப்பட்ட பெயர் பலகை வைக்கப்பட்டிருந்தது.
ஜி 20 மாநாட்டின் இரண்டாவது நாளான இன்றுஜி 20 நாடுகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சாரல் மழைக்கு நடுவே டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் வருகை தந்தனர். அவர்களை பிரதமர் மோடி சால்வை அணிவித்து வரவேற்றார்.
அதைத்தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உள்ளிட்ட தலைவர்கள் ஒரே நேரத்தில் மலர் வளையம் வைத்து மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தினர்.
