உத்திர பிரதேசத்தில் பயங்கரம், நிருபர்கள் முன்னிலையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை, 144 தடை உத்தரவு அமல்

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி

உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடி ஆதிக் அகமது மற்றும் சகோதரர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டனர். இது தொடர்பாக 3 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜை சேர்ந்தவர் ஆதிக் அகமது. முன்னாள் எம்பி. பிரபல தாதாவான இவர் மீது கொலை உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன். இந்நிலையில், கடந்த 2005ம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏவான ராஜூபால் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் ஆதிக் அகமது உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த கொலை வழக்கின் முக்கிய சாட்சியான வக்கீல் உமேஷ் பால் கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி சுட்டு கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஆதிக் அகமது, அவரது மகன் ஆசாத், கூட்டாளி குலாம் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் உமேஷ் பால் கொலை வழக்கில் ஆதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் ஆகியோரை போலீசார் கைது செய்து அகமதாபாத்தில் உள்ள சிறையில் அடைத்தனர். அவர்களை மருத்துவ பரிசோதனைக்காக கைவிலங்கிட்டு மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது இருவரும், போலீசாரின் முன்னிலையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்த நிலையில் 3 மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். உடலில் குண்டு பாய்ந்த நிலையில் இருவரும் சம்பவ இடத்திலேயே கீழே சுருண்டு விழுந்து உயரிழந்தனர். இதில் நிருபர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டது. முன்னதாக கடந்த மாதம் ஆதிக் அகமது உள்ளிட்ட 3 பேருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ஆயுள் தண்டனையும் விதித்து பிரயாக்ராஜ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆதிக் அகமது உள்ளிட்ட 2 பேர் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அப்போது அங்கிருந்த போலீசார், 3 பேரையும் சுற்றி வளைத்தனர். உடனே அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்தனர். விசாரணையில், துப்பாக்கியால் சுட்டவர்கள் நிருபர்கள் போர்வையில் காட்டி கொண்டு அவர்களுடன் ஊடுருவி இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது. முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின்போது பணியில் இருந்த 17 போலீசார் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.