சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,000ஐ தாண்டியது. 2023-2024ம் நிதியாண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில், நடுத்தர மக்களுக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் வகையில் தங்கம், வெள்ளி மற்றும் வைரம் மீதான சுங்கவரி உயர்த்தப்பட்டது. இதனால் மீண்டும் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை தொடலாம் என கூறப்பட்டது. அதன்படி, ஒன்றிய பட்ஜெட்டில் இறக்குமதி வரி உயர்வு அறிவிப்பு எதிரொலியாக ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வு கண்டிருக்கிறது.
இதற்குமுன் கொரோனா காலத்தில் 2020ல் ஆகஸ்ட் 7ம் தேதி ஒரு கிராம் அதிகபட்சமாக ரூ.5,420 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.43,360ஆக உயர்ந்திருந்ததே உச்சமாக இருந்தது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, சவரன் ரூ.43,800க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.30 உயர்ந்து ரூ.77.30க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக ரூ.44,000ஐ தாண்டியது.
ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.90ம், சவரனுக்கு ரூ.720ம் அதிகரித்து ரூ.44,040ஆக உள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,955 டாலர் உயர்ந்து, ஒன்றிய அரசின் வரி விதிப்பும் சேர்ந்ததால் விலை உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் ஒரு கிராம் ரூ.76ல் இருந்து ரூ.1.80 அதிகரித்து ரூ.77.80ஆக உள்ளது. சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், பணவீக்கம் காரணமாக வரும் நாட்களில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கும் என முதலீட்டு ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.