இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் மாரடைப்பு, கொரோனா பாதிப்புக்கும் தொடர்பா.?; மத்திய சுகாதாரத் துறை புதிய தகவல்

அரசியல் ஆரோக்கியம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோவிட் 19 செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள் மருத்துவம் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் ஏற்படும். ஆனால், இப்போது இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் கூட மாரடைப்பு அதிகமாக ஏற்பட ஆரம்பித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு பிறகு இது போன்ற இள வயது மாரடைப்புகள் அதிகம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்று காலத்திற்கு பிறகு மாரடைப்பு காரணமாக இளைஞர்கள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது தொடர்பாக அண்மையில் மக்களவையில் எழுத்து மூலமாக கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா எழுத்துபூர்வமாக பதில் அளித்தார். அவர் கூறியிருந்ததாவது:
”இது தொடர்பான 3 வெவ்வேறு ஆய்வுகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மேற்கொண்டு வருகிறது. இதில் முக்கியமாக, 18 முதல் 45 வயதுக்கு உள்பட்டோருக்கு திடீர் மாரடைப்பு ஏற்படுவது தொடர்பாக சுமார் 40 மருத்துவமனைகளில் ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசிக்கும் மாரடைப்புக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து சுமார் 30 மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” இவ்வாறு பதில் அளித்தார்.
குஜராத்தில் சமீபத்தில் நவராத்திரி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கர்பா நடனத்தின் போது பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு சிறுவன் உள்பட 10 பேர் உயிரிழந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குஜராத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, ”இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஓர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கொரோனா வைரஸால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து வேலை செய்வதை, கடுமையான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்க வேண்டும். திடீர் மாரடைப்பு ஏற்படாமல் தவிர்க்க 1 முதல் 2 ஆண்டுகள் வரை கடுமையான உடற்பயிற்சி அல்லது தீவிர வேலைகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். இதனால் மாரடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.