சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
தமிழகத்தில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் சென்னை புறநகர் பகுதிகளான பூவிருந்தவல்லி, ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், செம்பரம்பாக்கம், நசரத்பேட்டை, காட்டுப்பாக்கம், மாங்காடு, குன்றத்தூர் உள்ளிட்ட பல்வேறுப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை, மதுரவாயல், போரூர், வளசரவாக்கம், அம்பத்தூர் உள்பட சென்னையில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதேபோல் அசோக் நகர், வடபழனி, கோடம்பாக்கம் பகுதியில் லேசான மழை பெய்தது. சென்னை புறநகர் பகுதிகளான வேளச்சேரி, தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், அனகாபுத்தூர், சேலையூர், மாடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
ஒரு சில இடங்களில் கன மழையும், மிதமான மழையும் பெய்து வரும் நிலையில், தொடர்ச்சியாக சாரல் மழையும் விடாது பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், மதியம் ஒரு மணிக்கு பிறகு வானிலை மாற துவங்கி, சுமார் ஒரு மணி நேரம் பரவலாக கன மழை பெய்தது. இதேபோல் விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. விழுப்புரம், பிடாகம், கோலியனூர், காணை, முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதியிலும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலிலும் மழை பெய்தது.
இதனிடையே சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது.
அதேபோல இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், நாளை நீலகிரி, கோவை,
திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தென்காசி, திருப்பத்தூர், வேலூர்
ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.