திருக்கோயில் பிரசாதம் பக்தர்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தபால் துறையுடன் இணைந்து புதிய திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 48 முதல் நிலை திருக்கோவில்களில் பிரசாதங்கள் தபால் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் திருக்கோயில் தகவல்களை பக்தர்கள் எளிதாக அறியும் வகையில் திருக்கோயில் செயலி தொடங்கப்பட உள்ளது. இந்த இரண்டு திட்டத்தையும் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், பழனி தண்டாயுதபாணி திருக்கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட 48 முதுநிலை திருக்கோயில்களில் பக்தர்களின் விருப்பப்படி அர்ச்சனை செய்து, பிரசாதங்களை அவர்களின் இல்லங்களுக்கே அனுப்பி வைத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை, அஞ்சல் துறையுடன் இணைந்து புதிய திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாட்டின் திருக்கோயில்கள் தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியம், வரலாறு போன்ற பன்முக தகவல்களின் பெட்டகங்களாக திகழ்கின்றன. அத்தகைய திருக்கோயில்களின் தகவல்கள் மற்றும் சேவைகளை நவீன தொழில்நுட்பத்துடன் அனைவரும் அறிந்து பயன்படுத்தி கொள்ளும் வகையில் “திருக்கோயில்” என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
