கொரோனா பெருந்தொற்று ஒரு புறம் அச்சமூட்டிக்கொண்டிருக்க , மற்றொரு புறம் கடந்த ஓராண்டிற்கும் மேலாக செயல்பட இயலாத நிலையில் உள்ள கல்வி நிலையங்கள் , பெரும்பாலான பள்ளிகளில் இணைய வழி கல்வியே கற்பிக்க படுகிறது.இதனால் நம் வீட்டு பிள்ளைகள் மணிக்கணக்கில் கைப்பேசியில் செலவிட வேண்டியதன் கட்டாயம். வகுப்புகள் நடைபெறும் நேரங்கள் மட்டுமல்லாது தேர்வுகள் எழுதுவது , வீட்டுப்பாடம் செய்தல் என எல்லாமுமே அதிலே தான் செய்தாக வேண்டிருக்கிறது.
அவசியம் கருதி இணையவழி கல்வியை ஏற்றுக்கொண்டாலும் பிள்ளைகள் கைப்பேசியும் கையுமாகவே தான் பெரும்பாலும் இருக்கிறார்கள்.
என்ன தான் கல்வி செயல்முறை என சமாதானபடுத்தி கொண்டாலும் பெரும்பாலான நேரத்தை இணைய வழியில் செலவிடுகையில் அவர்களின் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட வழிவகுக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் கண் , காது சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.கைப்பேசியை கண்களுக்கு மிக அருகாமையில் தொடர்ந்து உபயோகிப்பதால் அதிலிருந்து வெளிவரும் மின் காந்த அலைகள் கண் எரிச்சல் , கண் வறட்சி , வலி போன்றவைகளை உண்டாக்குவதோடு பார்வை குறைபாடுகளையும் ஏற்படுத்தி விடுகிறது.
அடுத்ததாக பிள்ளைகள் கைப்பேசி பயன்படுத்தும் போது அவர்களை தொடர்ந்து கண்காணிப்பதும் அவசியமாகிறது. பல்வேறு செயலிகள் , விளையாட்டுகளை அவர்களாகவே பதிவிறக்கம் செய்து பயன்படுத்தவும் செய்கிறார்கள்.
பொதுவாகவே வளையொளி செயலியை உபயோகிக்கும்போது அவர்களுக்கு காண்பதற்கு ஏற்றக்கத்தக்கவற்றை மட்டுமே காண்பதை பெற்றோர்கள் உறுதிசெய்தல் அவசியம்.அதற்கெனவே பிரத்தியேகமாய் Parenting control , digital wellbeing போன்ற அமைப்புகள் கைப்பேசிகளில் இருக்கின்றன.
Parenting control அமைப்பின் மூலம் அவர்கள் எந்தெந்த மாதிரியான செயலிகள் , வளைதளங்களை உபயோகிக்கிறார்கள் என்பதை அறியமுடிகிறது , எதையெல்லாம் உபயோகபடுத்த கூடாது எனவும் கட்டுபடுத்த இயலும்.
மேலும் Digital wellbeing அமைப்பானது எவ்வளவு நேரம் கைப்பேசி உபயோகிக்கிறோம் என்பதில் தொடங்கி , எந்த செயலியில் அதிக நேரம் செலவழிக்கிறோம் , எவ்வளவு நேரம் பயன்படுத்தலாம் என நமக்கு நாமே கால நிர்ணயம் செய்து கொள்ளவும் உதவுகிறது.இதன் மூலம் குழந்தைகள் கைப்பேசி பயன்படுத்தும் நேரத்தை நெறிபடுத்தவும் முடியும். அறிவியல் வளர்ச்சி நம்மை செம்மைபடுத்துவதற்காகவே , அதை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்துவோம் ஆரோக்கியமான உடல் மற்றும் மனநலம் பேணுவோம்.