19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டி நாளை (பிப்ரவரி 11) நடைபெறவுள்ளது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான இந்தப் போட்டி தென்னாப்பிரிக்காவின் பெனோனி மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை பகல் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி மிகவும் வெற்றிகரமான அணியாகத் திகழ்கிறது. இதுவரை இந்திய அணி 8 முறை இறுதிப்போட்டிக்கு முன்னேறி அதில் 5 முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலிய அணி 3 முறை கோப்பையைக் கைப்பற்றி 2-வது வெற்றிகரமான அணியாக வலம் வருகிறது.
சமபலமிக்க இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி 6-வது முறையாக கோப்பையை வெல்லுமா அல்லது ஆஸ்திரேலிய அணி 4-வது முறை கோப்பையை வசமாக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. உலகக் கோப்பையை வெல்லப்போவது யார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.