இந்தோனேசியாவின் பாலியில் நடைபெறும் ஜி20 மாநாட்டில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் ஆரோக்கியம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுச் செயலர் வினய் குவாத்ரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் நவம்பர் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
உக்ரைன் மோதல்கள் மற்றும் அதன் தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை(நவ.14) பிரதமர் பாலி நகருக்குச் செல்கிறார்.
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோவின் அழைப்பின் பேரில் ஜி20 உச்சிமாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டில் உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம் போன்றவற்றைப் பற்றி மோடியும் மற்ற தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர். ஜி20 தலைவர்கள் சிலருடன் மோடி இருதரப்பு உறவுகள் குறித்து பேசுவார் என்று குவாத்ரா கூறினார்.
ஜி20 தலைமைப் பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிற்கு வழங்கப்படும்.
அதன்படி, தற்போது ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இந்தோனேசியா உள்ளது. டிசம்பர் 1 ஆம் தேதி முதல் முறையாக ஜி20 கூட்டமைப்பிற்கு தலைமை ஏற்கவுள்ளது.
அதன் பின்னர் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆண் தேதிகளில் ஜி20 உச்ச மாநாடு தில்லியில் நடைபெற உள்ளது.
ஜி20 என்பது உலகின் முக்கிய வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்களின் ஒரு அரசுகளுக்கிடையேயான முதன்மை மன்றமாகும்.
இதில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உறுப்பு நாடுகள்.