ஆசிய கோப்பை 2023; 8வது முறையாக கோப்பையை வென்று அசத்தியது இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி

இந்தியா இலங்கை உலகம் கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி விளையாட்டு

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணியின் இன்னிங்ஸ் 6.1 ஓவரிலேயே முடிவுக்கு வந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 6.1 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
இலங்கையின் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக பதும் நிசாங்கா, குசால் பெரேரா களத்தில் இறங்கினர். பெரோ ரன் ஏதும் எடுக்காமல் பும்ரா வேகத்தில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நிசாங்கா 2 ரன்னிலும் சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா ரன் ஏதும் எடுக்காமலும் சிராஜ் பவுலிங்கில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த தனஞ்செய டி சில்வா 4 ரன்கள் எடுத்திருந்தபோது சிராஜ் பந்துவீச்சில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களத்திற்கு வந்த கேப்டன் தசுன் ஷனகா ரன் ஏதும் எடுக்காமல் சிராஜ் பவுலிங்கில் போல்டாகி வெளியேறினார். இலங்கை அணி 12 ரன்னில் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து 38 ரன்கள் சேர்த்த நிலையில், இலங்கை அணி 50 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணி தரப்பில் முகம்மது சிராஜ் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதையடுத்து 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மிக எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக இஷான் கிஷன் – சுப்மன் கில் ஆகியோர் களத்தில் இறங்கினர்.
இருவரும் டி20 மேட்ச்சை போல் விளையாடியதால் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இந்திய அணி 51 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இஷான் கிஷன் 18 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 23 ரன்களும், சுப்மன் கில் 19 பந்துகளில் 6 பவுண்டரியுடன் 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 8 ஆவது முறையாக ஆசிய கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.