பருவநிலை மாற்றத்தால் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் தேசிய காலநிலை ஆராய்ச்சி மையம் (என்.சி.ஏ.ஆர்) சார்பில், ‘நேச்சர் க்ளைமேட் சேஞ்ச்’ இதழில் வெளியாகி உள்ள அறிக்கையில், ‘உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் கடல் மட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த நூற்றாண்டில் கடல் மட்ட உயர்வால் ஆசியாவின் சில பெருநகரங்கள், மேற்கு வெப்பமண்டல பசிபிக் தீவுகள் மற்றும் மேற்கு இந்தியப் பெருங்கடலை அதிக அளவில் பாதிக்கும். பருவநிலை மாற்றத்தால் மட்டும் சில இடங்களில் கடல் மட்டம் 20 முதல் 30 சதவீதம் வரை உயரும்.
அதனால் கடுமையான வெள்ளம் ஏற்படும். ஆசிய கண்டத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்கள் இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் கடல் மட்ட உயர்வால் கடுமையாக பாதிக்கப்படும். வரும் 2100ம் ஆண்டுக்குள் கடுமையான அச்சுறுத்தல் ஏற்படும். ஆசியாவில் உள்ள யாங்கூன், பாங்காக், ஹோஷிமின் சிட்டி மற்றும் மணிலா நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன.
காலநிலை மாற்றம் மற்றும் இயற்கைச் சாா்ந்த காலநிலை மாறுபாடு ஆகிய இரு நிகழ்வுகளின் கூட்டு விளைவு, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை விட 50 சதவீதம் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக கடற்கரையை ஒட்டிய பெருநகரங்களில் மிகவும் மோசமான வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதுடன், லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகவும் அமையும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.