பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கைகளுக்காக, தனியாக ஒரு செயற்குழு அமைப்பது என, ‘குவாட்’ நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்தியப் பெருங்கடல், சீனப் பெருங்கடல் பகுதி களில் சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கும் வகையில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து, ‘குவாட்’ என்ற அமைப்பை துவக்கியுள்ளன. இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம், புதுடில்லியில் நேற்று நடந்தது. இதில், நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமெரிக்காவின் பிளிங்கென், ஜப்பானின் யோஷிமசா ஹயாஷி, ஆஸ்திரேலியாவின் பென்னி வோங் ஆகியோர் பங்கேற்றனர்.
பயங்கரவாதம், தீவிர வாதம், வன்முறை ஆகியவை புதுப் புது வடிவங்களில் தினமும் உருவெடுத்து வருகின்றன. இவை, அமைதியான வாழ்க்கைக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
இவற்றை எதிர்கொள்வதற்கும், முறியடிப்பதற்கும், குவாட் அமைப்பு சார்பில் ஒரு செயற்குழு அமைக்கப்படும். தற்போது, ‘ஜி20’ அமைப்புக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. ‘ஜி7’ அமைப்புக்கு ஜப்பான் தலைமையேற்றுள்ளது. ஆசிய, பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டை அமெரிக்கா நடத்தவுள்ளது; இது, குவாட் அமைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.