இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி 3 நாட்களுக்குள் முடிவடைந்தது. அதில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா சதம் அடித்து அசத்தினார்.
இந்த தொடர் முடிவடைந்த பின்னர் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்கள் மற்றும் அணிகளின் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் அணிகளின் தரவரிசையில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஏற்கனவே இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பெற்ற அபார வெற்றியின் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. தற்போது அணிகளின் தரவரிசையில் இந்திய அணி 20-20 போட்டிகளில் 267 புள்ளிகளும், ஒருநாள் தரவரிசையில் 114 புள்ளிகளும், மற்றும் டெஸ்ட் தரவரிசையில் 115 புள்ளிகளும் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியிடம் அடைந்த தோல்வியின் காரணமாக ஆஸ்திரேலிய அணி 111 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 106 புள்ளி, நியூசிலாந்து 100 புள்ளி, தென் ஆப்பிரிக்கா 100 புள்ளி அணிகள் 3 முதல் 5 இடங்களில் உள்ளன.
