இந்தியாவில் குழந்தைகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14 அன்று இந்த தினம் கொண்டாடப்படுகிறது. குழந்தைகள் மீது நேரு மிகுந்த அன்புடன் இருப்பார். அவர் பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலும், குழந்தைகள் நலன், உரிமைகள் சார்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் கொண்டாட்டப்பட்டு வருகிறது.
காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் திருநாவுக்கரசர், ஈவிகேஎஸ் இளங்கோவன், கே.வீ.தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
நேருவின் பிறந்தநாளையொட்டி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார். அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோரும் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.
நேரு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கார்கே, நேரு நவீன இந்தியாவை உருவாக்கியவர் என்றும், அவரது பங்களிப்பின்றி 21ஆவது நூற்றாண்டில் இந்தியாவை நினைத்துப் பார்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். அவர் ஜனநாயகத்தின் வெற்றியாளர் என்றும், அவரது முற்போக்கு எண்ணங்கள்தான் இந்தியாவின் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தியது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘நமது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு மரியாதை செலுத்துவதாகவும், அவரது பிறந்தநாளில் நமது தேசத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்வதாகவும்’ குறிப்பிட்டுள்ளார்.