சேவைகள் துறையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி, 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.
ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சேவைகள் துறையின் செயல்பாடுகளும் முக்கிய அம்சமாக விளங்குகிறது. சேவைகள் துறைகள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, ஒரு நாட்டின் ஒருங்கிணைந்த பொருளாதார வளர்ச்சி உயர்ந்துகொண்டே செல்லும். அந்த வகையில், சேவைகள் துறையில் தொழில் நடவடிக்கைகளுக்கான குறியீட்டு எண் (PMI), அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனாவை பின்னுக்குத் தள்ளி வளர்ந்து வருவதாக ஹெச்எஸ்பிசி இந்தியா சர்வீசஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், இந்தியாவின் பிஎம்ஐ குறியீட்டு எண் கடந்த 2023 ஏப்ரலில் 13 ஆண்டுகளில் இல்லாத வகையில், அதிகபட்சமாக 62ஆக உயர்ந்தது. பின்னர், மே மாதத்தில் 61.2ஆகவும், ஜூன் மாதத்தில் 58.5ஆகவும் குறைந்தது. மீண்டும் ஜூலை மாதத்தில் 62.3ஆக உயர்ந்த பிஎம்ஐ, ஆகஸ்ட் மாதத்தில் 60.1ஆக குறைந்து, செப்டம்பரில் 61ஆகவும் வளர்ச்சி அடைந்தது.
பின்னர், அக்டோபரில் மீண்டும் 58.4ஆக குறைந்து, நவம்பரில் 12 மாதங்கள் காணாத குறைந்தபட்ச அளவாக 56.9ஆக குறைந்தது. பின்னர், மீண்டும் டிசம்பரில் 59ஆக அதிகரித்த பிஎம்ஐ, ஜனவரியில் 6 மாத உச்சமாக 61.8ஆக அதிகரித்தது. அதன் பின்னர் பிப்ரவரியில் 60.6ஆக குறைந்து, மார்ச் மாதத்தில் 61.2ஆக அதிகரித்தது. இந்த நிலையில், மதிப்பீட்டு மாதமான ஏப்ரலில் பிஎம்ஐ அளவு 60.8ஆக பதிவானது. இது கடந்த 14 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட அதிவேக பிஎம்ஐ வளர்ச்சியாகும்.
பொருளாதார சூழல்கள் சாதகமாக இருந்ததால், சேவைகளுக்கான தேவையும் உள்நாடு மற்றும் வெளிநாட்டில் அதிகரித்து, பிஎம்ஐ வேகமாக வளர்ச்சியை கண்டுள்ளதாக, பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், கடந்த 33 மாதங்களாக, பிஎம்ஐ குறியீட்டு எண், 50க்கு மேல் இருப்பதும், சேவைகள் துறையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அறிகுறி என்றும் கூறப்படுகிறது.