பிறந்தது பிலவ வருடம் தமிழ் புத்தாண்டு.
அனைவருக்கும் NRI தமிழின் இனிய பிலவ வருட தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
தமிழ் வருடங்கள் மொத்தம் அறுபது , அதில் 35 ஆம் ஆண்டு தற்போது பிறக்க இருக்கும் ” பிலவ” புத்தாண்டு.
சென்ற சார்வரி வருடம் , பருவ மழை தவறி , பெருந்தொற்று பரவி , மிகுந்த சோதனைகளை கொடுத்துவிட்டு நம்மை ஒரு உலுக்கு உலுக்கி சென்றுள்ளது.
இந்த பிலவ வருடம் , சித்திரை மாதம் – முதல் நாள் , துவிதியை திதி , சுக்ல பக்ஷ , பரணி நக்ஷத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில் பிறக்க உள்ளது.
புத்தாண்டு வழிபாடு :
தமிழ் புத்தாண்டில் , நமது பாரம்பரிய உடை அணிந்து , பஞ்சாங்கத்திர்க்கு பூஜை செய்து , வேப்பம்பூ ரசம் , மாங்காய் பச்சடி, மற்றும் நீர் மோர் , பானகம் செய்து வழிபட்டு , அவரவர் முறைப்படி கண்ணாடி முன் பல்வேறு வகையான அலங்கார பொருட்கள் வைத்து , உள்ளம் குதுகலத்தில் துள்ள சுற்றம் சூழ கொண்டாடுவது நமது பண்பாடு.
புத்தாண்டு அன்று இனிப்பு , புளிப்பு , கசப்பு , உவர்ப்பு போன்ற பல் சுவை உணவுகளை உட்கொள்வது நமது மரபு.
உணவின் மூலம் அனைத்து சுவையும் சேர்ந்தது தான் ஆரோக்கியமான வாழ்க்கை என்கிற தத்துவத்தை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது நமது புத்தாண்டு கொண்டாட்டம்.
பிலவ ஆண்டு பொதுப்பலங்கள் :
எல்லா தமிழ் வருடத்திற்கும் ஒரு வெண்பா பாடிவிட்டு சென்றுள்ளார் ” இடைக்காட்டு சித்தர் “
இந்த பிலவ வருட வெண்பாவில்
“பிலவத்தில் மாரி கொஞ்சம் பீடை மிகும் ராசர் சில மிகுதி துன்பம்தரும் நலமில்லை.
நாலுகாற் சீவனெல்லாம் நாசமாம் வெள்ளாண்மை பாலுமின்றிச்செய்புவனம் பாழ்”
மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த வெண்பாவில் குறிப்பிட்டபடி இந்த ஆண்டும் பருவ மழை தவறி பொழியும்.
எல்லாம் வல்ல இறைவன் அருளால் இந்த வருடம் நாம் அனைவரும் ஒற்றுமையுடன், நீண்ட ஆரோக்கியத்தை வேண்டி , நோய்த்தொற்றுகள் யாவும் விலகட்டும் என்கிற பிரார்தனையுடன் இந்த புத்தாண்டை வரவேற்போம்.
சா.ரா.
முனைவர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் நேர்காணல் – பேரூர், கோவை