சர்வதேச புத்தக கண்காட்சி 2024 ஜனவரியில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான சென்னை சர்வதேச புத்தக கண்காட்சி குறித்து ஒலி, ஒளி காட்சி திரையிடப்பட்டு தேதியும் அறிவிக்கப்பட்டது. அதன்படி ஜனவரி மாதம் 16, 17, 18 ஆகிய தேதிகளில் சர்வதேச புத்தக கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் என்று அறிவித்தார். மேலும், புத்தகங்களை மொழிபெயர்ப்பதற்காக ரூ. 3 கோடி நிதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த பள்ளி
கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சர்வதேச புத்தக கண்காட்சிக்கு ஆறு மாதத்திற்கு முன்பே முடிவு எடுக்கப்பட்டு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்றார். கடந்த முறை 30 நாடுகள் எதிர்பார்த்து இருந்தோம் 24 நாடுகள் பங்கேற்றது. இந்த முறை நிச்சயமாக 50 நாடுகள் பங்கேற்பது இலக்காக வைத்துள்ளோம். இதனை அடுத்து குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் சேர்வோரிடம் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது என்பதை முதலில் வேண்டுகோளாக வைத்திருக்கிறேன். தற்போது எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
தலைமை ஆசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் இருக்கிறது என்பதை யாரும் நம்ப வேண்டாம் எனக்கூறிய அவர் சீனியாரிட்டி அடிப்படையில் தலைமை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனக்கூறினார்.
