சர்வதேச செவிலியர் விருது; 2023ஆம் ஆண்டிற்கான இறுதிப் பட்டியலில் இரண்டு இந்திய செவிலியர்கள்

அரசியல் ஆரோக்கியம் இந்தியா உலகம் செய்திகள் நிகழ்வுகள் மருத்துவம் முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

ஒவ்வொரு ஆண்டும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12-ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் உலகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச செவிலியர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு விருதுக்கான போட்டியின் இறுதி பட்டியலில் உலக அளவில் 10 போட்டியாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதில் இந்தியாவைச் சேர்ந்த 2 செவிலியர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அந்தமான் நிகோபர் தீவில் பழங்குடியினருக்காக பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த சாந்தி தெரசா லாக்ரா மற்றும் கேரளாவில் பிறந்த ஜின்சி ஜெர்ரி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த விருதுக்காக உலகின் 202 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 52 ஆயிரம் செவிலியர்கள் விண்ணப்பங்களை அனுப்பியிருந்தனர். இதில் இந்தியாவில் இருந்து மட்டும் 13,156 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் இருந்து பத்து பேர் கொண்ட இறுதிப்பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விருதிற்காகத் தேர்வு செய்யப்படும் செவிலியருக்கு 2 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படும்.
தெரேசா லக்ரா அந்தமான் தீவில் சுனாமியின் போது மிகச் சிறப்பாக பணியாற்றியவர். இதற்காக 2011 ஆம் ஆண்டு லக்ராவிற்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு. சுனாமியின் போது அந்தமானில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதி ஓங்கே என்கிற பழங்குடியினர் வாழும் தீவு. காடுகள் சூழ்ந்த இந்த தீவில் லக்ரா அந்த பழங்குடியின மக்களோடு டெண்ட் அமைத்துத் தங்கி அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளைச் செய்திருக்கிறார்.
இறுதிப் பட்டியலில் இருக்கும் தனக்கு விருது கிடைத்தால் கிடைக்கும் பரிசுத் தொகையைக் கொண்டு மிகவும் கைவிடப்பட்டு அழிவு நிலையில் இருக்கும் பழங்குடியின மக்களுக்கு முறையான மற்றும் தேவையான மருத்துவ உதவிகள் செய்வதற்காக ஒரு தொண்டு நிறுவனம் அமைப்பேன் என்று சாந்தி தெரேசா லக்ரா கூறியுள்ளார்.
கேரளாவில் பிறந்தவரான ஜென்சி தற்போது டப்ளினில் பணியாற்றி வருகிறார். இவர் செவிலியர்களின் பணிகளை மிகவும் சுலபமாக்கும் வகையில் இந்த துறையில் ரோபோட்டிக் தொழில்நுட்பத்தைப் புகுத்தியிருக்கிறார். இதனால் மனித தவறுகளற்ற, மிகத்துல்லியமான பணிகளை அணுக முடிந்தது. இந்த ரோபோட்டிக் தொழில்நுட்பத்தால் செவிலியர்கள் அதிக நேரம் நோயாளிகளுடன் செலவிட முடிந்தது. இதற்காக ஜென்சி ஜெர்ரி இந்த விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார். இவர் டெல்லியில் உள்ள ஜாமியா ஹமார்ட் செவிலியர் பயிற்சிப் பள்ளியில் பயின்றவர். பத்து பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தற்போது நடுவர் குழுவின் முடிவிற்காகக் காத்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *