ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 77 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பட்டியலில் 2வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. வரும் 23ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதி போட்டிக்கான முதல் குவாலிபயர் போட்டியில் முதல் இடத்தில் உள்ள குஜராத்துடன் சிஎஸ்கே பலப்பரீட்சை நடத்த உள்ளது.
இதனிடையே நேற்று வெற்றிக்கு பின் பேட்டி அளித்த கேப்டன் டோனியிடம், சிஎஸ்கே ஐபிஎல்லில் 14 முறை பங்கேற்றுள்ளதில் 12 முறை பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த டோனி, “இதற்கென்று தனி சூத்திரம் எதுவும் இல்லை. அணியில் வீரர்களுக்கு அவர்களது பலத்திற்கு ஏற்றவாறு ரோல்கள் கொடுக்கப்படுகிறது. மேலும் அவர்களது பலவீனம் தெரிந்து அதில் வளர்ச்சி அடைய பயிற்சிகளும் உரிய கவனமும் செலுத்தப்பட்டு வருகிறது. சில வீரர்கள் சில இடங்களை தியாகம் செய்து மற்ற இடங்களிலும் விளையாட வேண்டிய சூழலும் இருக்கும். அதற்கு தகவமைத்துக் கொள்கின்றனர். இவை அனைத்திற்கும் மேலாக அணியில் இருக்கும் பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி வரும் உதவியாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது தான் இதற்கு காரணமாக பார்க்கிறேன், என்றார்.