கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் மிக வேகமாய்ப் பரவி வருகிறது. நாளுக்கு நாள் தொற்றுக்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே வரும் நிலையில், இறப்பின் விகிதமும் அதிகரித்தபடியே இருக்கிறது. மயானங்களில் எரிபட இறந்தவர்களின் பிணங்கள் காத்துக் கிடக்க வேண்டிய வேதனையான சூழல் நிலவி வருகிறது.
கொரோனா பாதித்த நோயாளிகளுக்கான முக்கிய தேவையான பிராண வாயு (ஆக்சிஜன்) போதுமான அளவு மருத்துவமனைகளில் இல்லாமல் இருப்பதும் கொரோனா காரணமான மரணங்கள் உயர்வதற்கான முக்கிய காரணிகளுள் ஒன்றாக இருக்கிறது. நாட்டில் ஆக்சிஜன் உற்பத்தியை பெருக்கவும், கையிருப்பை அதிகரிக்கவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறும் முயற்சிகள் புரிந்து வரும் நிலையில், பல உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜனை தானமாக அளித்து உதவி வருகின்றன.
நாட்டில் நிலைமை இப்படியாயிருக்க, மருத்துவமனைகளில் பற்றாக்குறையாய் இருக்கும் கொரோனா நோயாளிகளின் முக்கிய தேவையான ஆக்சிஜனும், கொரோனா மருந்துகளும் கள்ளச் சந்தையில் தாராளமாய்ப் புழங்கி வருவதாய் அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அரசாங்கத்தால் அளிக்கப்படும் ஆக்சிஜனைப் பதுக்கி ரூ.10,000 விலைமதிப்புள்ள ஒரு சிலிண்டரை, 40 முதல் 60 ஆயிரம் ரூபாக்கள் வரை விலை வைத்து கள்ளச்சந்தையில் விற்பதாய் வரும் தகவல்கள் பேரதிர்ச்சியைய் தருகிறது.
மேலும் அரசாங்கத்தால் ஸ்ரீஹரிக்கோட்டாவில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனில் சரி பாதி, கடத்தப்பட்டு கள்ளச் சந்தைக்கு அனுப்பி வைக்கப் படுவதற்கான ஆதாரங்கள் வெளியாக அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
கொரோனா காரணமாய் நாடே சுவாசமின்றி திண்டாடி வரும் நிலையில், ஒரு சிலர் வியாபர நோக்குடனும், இலாப நோக்குடனும் சுயநலமாய் செயல்பட்டு வருவது வைரசைக் காட்டுலும் கொடியவன் மனிதன் தான் என தீர்க்கமாய் எடுத்துரைக்கிறது.