கமல்ஹாசன் கோவிட் விதிமுறைகளை மீறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்: தமிழக சுகாதாரத்துறை செயலாளர்.

செய்திகள் தமிழ்நாடு

நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் நவம்பர் 22 அன்று, சிகாகோவிலிருந்து திரும்பிய பிறகு கோவிட் -19 ஆல் தான் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் “கோவிட்-19 தொற்றுநோய் இன்னும் முடிவடையவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள், கவனமாக இருங்கள்” என்று ட்வீட் செய்திருந்தார்.

போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வந்த அவர், டிசம்பர் 4 ஆம் தேதி அந்த மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதே நாளில், அவர் பிக்பாஸ் படப்பிடிப்புக்காக செட்டுகளுக்குத் திரும்பியிருந்தார்.

கமல்ஹாசன் கோவிட் -19 க்கு சிகிச்சை பெற்று வரும் போது, நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். டிசம்பர் 4 ஆம் தேதி அவர் செட்டுகளுக்குத் திரும்பிய பிறகு, நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் தங்கள் சமூக ஊடகப் பக்கங்களில் ஒரு விளம்பர கிளிப்பைப் பகிர்ந்து கொண்டனர், அந்த பதிவின் மூலம் கமல்ஹாசன் பார்வையாளர்களின் அன்பு மற்றும் விருப்பங்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள விதிகளின்படி, ஒரு கோவிட்-19 நோயாளி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு ஏழு நாட்களுக்கு வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்தி இருத்தல் வேண்டும்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட உடனேயே ரியாலிட்டி ஷோவுக்குத் திரும்பியதன் மூலம் கோவிட் -19 விதிமுறைகளை மீறியதாக அவர்மீது எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து ”இதுகுறித்து விசாரணை நடத்தப்படும்” என்று தமிழ்நாடு சுகாதாரத் துறைச் செயலர் ஜே ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். கோவிட்-19-ன் ஓமிக்ரான் மாறுபாட்டால் ஏற்படும் அச்சுறுத்தலை அடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு தீவிர சிகிச்சைப் பிரிவை ஆய்வு செய்த பின்னர், சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் மேலும் கூறுகையில், “மற்ற நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் கோவிட் -19 க்கு உள்ளாகி இருந்தால், அவர்களை ஏழு நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம், அந்த நேரத்தில் அவர்கள் தங்கள் நிலையை சுயமாக கண்காணிக்க வேண்டும். வந்து எட்டாவது நாளில் மீண்டும் சோதனை செய்கிறோம். ஆனால் இது நடக்கத் தொடங்கும் முன்பே, ஹாசன் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். எனவே, இதை தனி வழக்காக விசாரிக்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.

தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் “நாங்கள் மக்களை குழப்ப விரும்பவில்லை. அனைவரும் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வதையும் முகமூடிகளை அணிவதையும் நாங்கள் விரும்புகிறோம். அதிர்ஷ்டவசமாக, கமல்ஹாசன் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டதால் அவர் குணமடைந்துள்ளார்” என்றார்.

ஒரு நாள் டி.ஆர்.பி க்காக மருத்துவமனையில் இருந்து நேராக படப்பிடிப்பு தளத்திற்கு வருவது முறையல்ல. நோயைப் பற்றி நன்கு அறிந்தவர்களே இவ்வாறு தவறிழைத்தல் எந்த வகையில் நியாயமாகும்? அரசு கோவிட் -19 நோயாளிகளுக்கு 14 நாட்கள் தனிமை அவசியம் என்று பல முறை அறிவுறுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை. நம்மை நாமே காத்துக்கொள்ள கோவிட்-19ஐ தடுப்பதற்கான நெறிமுறைகளை முறையாக கடைபிடிப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *