கறைகள் களங்கம் அல்ல…!

ஆரோக்கியம் செய்திகள்

இன்றைய தினம் மே 28 மாதவிடாய் சுகாதார நாளாக வருடந்தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.ஏன் இன்றைய தினம் அனுசரிக்கப்படுகிறது என்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.அதாவது பெண்களின் மாதவிடாய் சுழற்சியில் இரு மாதவிடாய் காலத்திற்கு இடைப்பட்ட கால அளவு சராசரியாக 28 நாட்கள் என்ற வகையில் 28 ம் தேதி எனவும் , சராசரியாக 5 நாட்கள் வரை உதிரப்போக்கு இருப்பதனால் ஐந்தாம் மாதத்தை கணக்கில் கொண்டு மே 28 மாதவிடாய் சுகாதார நாளாக அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு ஆய்வுப் பொருள் ( தீம் ) கொண்டு கடைப்பிடிக்கப்பட்டு வருவதை போல இந்த ஆண்டிற்கான ஆய்வுப்பொருள் மாதவிடாய் சுகாதாரத்திற்கான ஆரோக்கியத்திற்கான நடவடிக்கை மற்றும் முதலீடு (action and investment in menstrual hygiene and health ) , அதாவது மாதவிடாய் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் சார்ந்த புரிதலை ஏற்படுத்திடவும் மாதவிடாய் காலத்தில் உபயோகிக்கப்படும் பொருட்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைத்திடுவதை உறுதி செய்வதற்காகவும் அமைக்கப்பட்டிருக்கிறது

மேலும் 2030 ஆம் ஆண்டில் எந்த ஒரு பெண்ணும் தன் மாதவிடாயை காரணமாக கொண்டு கல்வி , வேலை வாய்ப்பு , வளர்ச்சி என எதிலும் பின்தங்கிடாது இருக்க வேண்டும்
என்ற தொலைநோக்கு பார்வையை கொண்டுள்ளது. இந்தியா போன்று வளர்ந்து வரும் நாடுகளில் இன்னும் சில கிராமங்களில் மாதவிடாய் குறித்த புரிதலின்றி இருக்கிறார்கள். மேலும் அந்த காலகட்டத்தின் ஏற்படும் உடல் மற்றும் மனம் சார்ந்த மாற்றங்களை கவனிக்கவும் தவறிவிடுவதால் பிற்காலத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு வழிவகுத்துவிடுகிறது.

மாதவிடாய் காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :

மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தப்படும் அணையாடையை ( napkin ) கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.மேலும் அது எவ்வளவு தான் தரமாக , விலை உயர்ந்ததாக இருந்தாலும் 4-5 மணி நேர்த்திற்குள்ளாக அதனை மாற்றிவிட வேண்டும் .அவ்வாறு செய்யாத பட்சத்தில் கிருமித்தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது.

மேலும் பருத்தியிலான அணையாடையை பயன்படுத்தும் போது அதனை ஒவ்வொரு உபயோகத்திற்கு பின்பும் நன்கு துவைத்து
வெயிலில் காய வைத்தே பயன்படுத்த வேண்டும்.
பொதுவாகவே இரு வேளை குளியல் நல்லது.மாதவிடாய் காலத்தில் இரு வேளை குளியல் அவசியம்.
பயன்படுத்தும் ஆடைகள் , உள்ளாடைகள் முதலியவற்றை நன்கு வெயிலில் காயவைத்து பயன்படுத்த வேண்டும்.

உணவுமுறை பழக்கவழக்கங்கள் :
நாளொன்றிற்கு குறைந்தபட்சம் 2-3 லிட்டர் தண்ணீர் அருந்துதல் நல்லது.பழங்கள்/ பழச்சாறுகளாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
வாரம் இரு முறையேனும் முருகங்கைக்கீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
வளர்இளம் பெண்களுக்கு குறிப்பாக பருவவயதில் உள்ள பெண்களுக்கு மாதவிடாய் குறித்த விஷயங்களை சொல்லித்தருதல் அவசியமாகிறது , அது போலவே அவர்களது உணவில் உளுந்து ,எள் , வேர்க்கடலை , வெந்தயம் போன்றவற்றை தினந்தோறும் உட்கொள்ளுதல் நலம்.
சிறுதானிய உணவு வகைகளாக வரகு , கேழ்வரகு போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

நல்ல ஆரோக்கியமான உணவு , சரியான புரிதல் , தேவைக்கேற்ற மாதவிடாய் சுகாதாரம் பேணும் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு மாதவிடாய் என்பது ஆரோக்கிய உடலின் செயல்பாட்டின் அடையாளம் என்பதை மனதில் பதியவைப்போம். கறைகள் கலங்கமல்ல என்பதை பேசுவோம் , ஆரோக்கியமான சந்ததிகள் உருவாக வழிவகுப்போம்.

மரு . கீதா பரமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *