224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ம் தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதன் முடிவில், 36 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி 137 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று உள்ளது.
இதில், கனகாபுரா தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.த. வேட்பாளர் நாகராஜூவை 1,22,392 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரான டி.கே. சிவக்குமார் வெற்றி பெற்றார். இதேபோன்று, வருணா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சித்தராமையா, தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க.வின் வி.சோமண்ணாவை 46,163 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்வியும் எழுந்தது. காங்கிரஸ் கட்சி இதுவரை முதல்வர் வேட்பாளர் அறிவிக்காத நிலையில், டி.கே. சிவக்குமார் – சித்தராமையா ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், கட்சியின் மூத்த தலைவர் சித்தராமையா உள்பட 135 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் 2 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் கர்நாடக முதலமைச்சரை தலைமை முடிவு செய்ய ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றபட்டது.