கர்நாடகாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ள சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாரின் பலம், பலவீனங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரிதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதற்கு, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவும் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவர் டி.கே.சிவக்குமாரும் முக்கிய பங்காற்றினர். அதனால், காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்குப் பிறகு முதலமைச்சர் போட்டியில் இருவரும் நேரடியாக மோதிக் கொள்ளும் சூழல் இருந்தது.
75 வயதான முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா, 1948- ஆம் ஆண்டு பிறந்தவர். பாரதிய லோக் தளம் கட்சியில் அரசியல் வாழ்க்கை தொடங்கிய அவர், பின்னர் ஜனதா தளக் கட்சியில் இணைந்தார். முன்னாள் பிரதமர் தேவகவுடாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1983-ல் சாமுண்டேஸ்வரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதே தொகுதியில் 5 முறை தேர்வான அவர் இருமுறை தோல்வியையும் தழுவியுள்ளார்.
சித்தராமையாவின் பலத்தை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கோடு வலம் வருபவர். 2013 முதல் 2018 வரை முழு ஆட்சிக்காலத்தையும் நிறைவு செய்தவர் என்ற பெருமையையும் பெற்றவர். கர்நாடாகாவில் வெகு சில முதலமைச்சர்களே தங்களது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்துள்ளனர்.
சிவக்குமார் மீது வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ ஆகிய அமைப்புகள் வழக்கு தொடர்ந்துள்ளன. சொத்துக்குவிப்பு உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன. சித்தராமையாவுடன் ஒப்பிடும்போது சிவக்குமாருக்கு வெகுஜன ஈர்ப்பும் அனுபவமும் குறைவு. பழைய மைசூர் பகுதியில் மட்டுமே செல்வாக்கு பெற்றவர். அதன் காரணமாக முதல்வர் போட்டியில் முன்னிலையில் இருந்துவந்தார் சித்தராமையா. தற்போது, தேசியத் தலைமையால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

