கர்நாடகா சட்டப்பேரவைக்கான தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. ஆளும் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி என்றாலும், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் கணிசமாக வேட்பாளர்களை களமிறக்கியுள்ளன. கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் மொத்த 224 இடங்கள் உள்ளன. இதில், 113 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சி அமைக்க முடியும்.
கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104, காங்கிரஸ் 80, மதச் சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றன. அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் பாஜக ஆட்சியமைத்தது. ஆனால், பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் ஓரு வாரத்தில் பாஜக ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி முதலமைச்சரானார். ஓராண்டில், ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கள் சிலர் பாஜகவிற்கு தாவினர். பாஜகவின் எடியூரப்பா முதலமைச்சரனார். பின்னர், உட்கட்சி முடிவால், 2021ம் ஆண்டு பசவராஜ் பொம்மை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்த முறை கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான காற்று வீசுவதாக சொல்லப்படுகிறது. கருத்துக் கணிப்புகள் பலவற்றிலும் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. சிலர், மதச்சார்பற்ற ஜனதா தளம் அடுத்த ஆட்சியை தீர்மானிப்பதில், முக்கிய பங்கு வகிக்கும் என்றும் சொல்லப்படுகிறது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் அடுத்தடுத்தடுத்து வேட்பாளர்களை அறிவித்து, தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனால், ஆளும் பாஜகவில் அதிருப்தி குரல்கள் அதிகம் கேட்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா உள்ளிட்டோரின் பிரச்சாரம், வியூகம் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கும். குஜராத் போல கர்நாடகத்திலும் தங்களுக்கு சாதகமான முடிவு வரும்’ என்கிறார்கள் பாஜகவினர். கட்சியில் இருந்து விலகியுள்ள ஜெகதீஷ் ஷெட்ட முன் வைத்துள்ள குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள எடியூரப்பா 150 இடங்களுக்கு மேல் வென்று, ஆட்சி அமைப்போம் என்கிறார்.