கர்நாடக அரசு சார்பில் விமான போக்குவரத்து சேவை தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டு வருகிறது என்று அந்த மாநிலத்தின் பெரிய மற்றும் நடுத்தர தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு துறை அமைச்சர் எம்.பி.பாட்டில் தெரிவித்தார்.
கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு அமைந்து 100 நாட்கள் நிறைவு பெற்றதை முன்னிட்டு, அரசின் சாதனை விவரங்களை புத்தகமாக வெளியிடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அமைச்சர் பாட்டில் சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “கர்நாடகாவில் உள்ள விமான நிலையங்கள் அனைத்தும் விமான ஆணையரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
விமான நிலையத்தின் நிலங்களும் கூட விமான ஆணையரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கட்டப்பட்டுள்ள அனைத்து விமான நிலையங்களும் எதிர்காலத்தில் மாநில அரசு சார்பில் நிர்வாகம் செய்யப்படும். சிவமோக விமான நிலையம் மாநில அரசு சார்பில் நிர்வகிக்கப்படுகிறது. இந்த நிலையில் புதிதாக விமான போக்குவரத்து சேவையை தொடங்குவதற்கும் அரசு பரிசீலனை செய்து வருகிறது” என்று தெரிவித்தார்.
