கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான பாஜகவின் முதல் வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்க படுகிறது.
கர்நாடகா வரும் மே 10 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. முடிவுகள் மே 13 ஆம் தேதி அறிவிக்கப்படும். இந்தியத் தேர்தல் ஆணையம் மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மார்ச் 29 ஆம் தேதி அமல்படுத்தியது.
தேர்தலுக்கு முன்னதாக அந்தந்த கட்சியின் வேட்பாளர்களின் பட்டியல் வெளியீடு குறித்த செய்திகள் வலம் வருகின்றன. தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில் வாக்காளர்களைக் கவர கட்சிகள் தயாராகி வருகின்றன.
கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 175 ற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் பாஜக விரைவில் வெளியிடவுள்ளது.
இது தொடர்பாக விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் டெல்லி இல்லத்திற்கு சென்றுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் ‘புதியவர்களுக்கு வழி விடுவார்’ என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முதல் பட்டியல் இரவு 9 மணிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றக் குழு உறுப்பினர் பிஎஸ் எடியூரப்பாவுக்கும் (பிஎஸ்ஒய்) மூத்த தலைவர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காங்கிரஸின் பிருத்விராஜ் சவான் அளித்த பேட்டியில் “கர்நாடகாவில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் ஜேடிஎஸ்-ன் ( ஜனதா தல் கட்சி) யின் பங்கு குறித்து கவலையாக உள்ளது.“ என்று கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், ஆளும் பாஜக, தெலுங்கு படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடலின் சொந்த பதிப்பை செவ்வாய்கிழமை வெளியிட்டது.
தேர்தல் பிரச்சாரப் பாடலில், பாரதிய ஜனதா கட்சி, ‘நாட்டு நாடு’ என்ற வரிகளுக்குப் பதிலாக ‘மோடி மோடி’ என்று மாற்றி, மாநிலத்தில் காவி கட்சியின் சாதனைகளை எடுத்துரைத்து வருகிறது.