பிரசித்தி பெற்ற திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் இன்று பொங்கல் வழிபாடு நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர். திருவனந்தபுரத்தில் உள்ள ஆற்றுகால் பகவதி அம்மன் கோயிலில் வருடம் தோறும் மாசி மாதத்தில் நடைபெறும் பொங்கல் விழா உலகப் பிரசித்தி பெற்றதாகும். இங்கு பொங்கலிட 15 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் குவிந்தது கின்னஸ் சாதனையானது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக திருவிழா சிறப்பாக இல்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் இல்லையென்பதால் கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பெண்கள் குவிந்தனர். இன்று காலை ஆற்றுகால் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டது. அதன் பிறகு பெண்கள் பொங்கலிடத் தொடங்கினர். அப்போது புகையால் திருவனந்தபுரம் நகரமே புகை மண்டலமானது. பொங்கலை முன்னிட்டு நாகர்கோவில், எர்ணாகுளம், கொல்லம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு ரயில்களும், பஸ்களும் இயக்கப்பட்டன. பாதுகாப்புக்காக 3,500 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். நாளை குருதி தர்ப்பணத்துடன் இவ்வருட ஆற்றுகால் கோயில் பொங்கல் விழா நிறைவுபெறும்.