கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள கம்பமலையில் மாவோயிஸ்டுகளுக்கும், தண்டர்போல்ட் போலீசார்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 18வது நாடாளுமன்ற தேர்தல் ஏப். 19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் கேரளாவுக்கு ஒரேகட்டமாக கடந்த 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு 24 ஆம் தேதி, வயநாடு கம்பமலைப்பகுதியில் மாவோயிஸ்டுகள் துப்பாக்கியுடன் மக்கள் வாழும் பகுதிக்கு சென்று, ஓட்டு போடுவதால் எந்த பயனும் இல்லை என மக்களிடம் கூறிவிட்டு வனப்பகுதிக்குள் சென்றனர்.
இதனை மக்கள் போலீஸிடம் தெரிவித்ததை தொடர்ந்து அப்பகுதிக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு தண்டர்போல்ட் போலீசார் மூன்று நாட்களாக தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இன்று காலை மாவோயிஸ்டுகளுக்கும் தண்டர்போல்ட் படையினருக்கும் ஒன்பது சுற்று துப்பாக்கி சூடு நடந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டினை தொடர்ந்து அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் மாவோயிஸ்டுகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.