கேரளாவில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 8 நாட்களில் ரூ.665 கோடிக்கு மேல் மது வகைகள் விற்பனையாகி உள்ளது. கேரளாவில் விஸ்கி, பிராந்தி, ரம் உள்பட இந்திய தயாரிப்பு வெளிநாட்டு மதுபான வகைகள் கேரள மதுபான விற்பனை கழகத்தின் சில்லறை கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கேரளா முழுவதும் 320 மதுக்கடைகள் உள்ளன. இது தவிர பார்கள் மூலமும் மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலும் ஓணம், சித்திரை விஷு, கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகை நாட்களில்தான் மது விற்பனை அதிகமாக இருக்கும்.
இந்த வருடமும் வழக்கம்போல ஓணம் பண்டிகையை முன்னிட்டு கேரளாவில் மது விற்பனை சூடு பிடித்தது. ஓணம் பண்டிகை தினமான நேற்று அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் வரை 8 நாளில் மட்டும் ரூ.665 கோடிக்கு மேல் மது வகைகள் விற்பனையானது. இந்த நாட்களில் கடந்த வருடம் நடந்த விற்பனை ரூ.624 கோடியாகும். நேற்று முன்தினம் ஒரே நாளில் விற்பனை ரூ.121 கோடியை தாண்டியது. திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலக்குடாவில் உள்ள ஒரு கடையில் மட்டும் ரூ.1.06 கோடிக்கு விற்பனை நடந்தது. கொல்லம் மாவட்டம் ஆஸ்ராமம் பகுதியில் ஒரு கடையில் ரூ.1.01 கோடிக்கு மது வகைகள் விற்பனையானது. இது சில்லறை கடைகளில் நடந்த விற்பனையின் கணக்கு மட்டுமே ஆகும். பார்களில் நடந்த விற்பனையையும் சேர்த்தால் தொகை மேலும் அதிகரிக்கும்.
