மாநில அரசின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாட்டில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்த அனுமதி வழங்கியதற்காக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இளம் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் உள்ளிட்ட சர்வதேச போட்டிகளுக்கு தயார்படுத்துவதற்காக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் இளம் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற வாய்ப்பு ஏற்படும்.
இந்தநிலையில் இந்த முறை தமிழ்நாட்டில் கேலோ இந்தியா போட்டிகளை நடத்த மாநில அரசு அனுமதி கேட்டிருந்தது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். போட்டிகளுக்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படாத நிலையில், செஸ் ஒலிம்பியாட் போல கேலோ இந்தியா போட்டிகளை சிறப்பாக நடத்த இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூருக்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிறப்பான முறையில் கேலோ இந்தியா போட்டிகளை தமிழ்நாடு நடத்தும் என்று கூறியுள்ளார்.