ராஜராஜ சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவ., மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(நவ.,02) தஞ்சாவூரில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1037 வது சதயவிழா தஞ்சாவூர் பெரிய கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது. மேலும், பெரிய கோயில் வளாகத்தில் கவியரங்கம், கருந்தரங்கம், ஆன்மிக சொற்பொழிவு, பரிசளிப்பு விழா நடந்தது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து வந்த கோரிக்கைளை ஏற்று இந்த ஆண்டும், இனிவரும் ஆண்டுகளிலும் மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளினை அரசு விழாவாக கொண்டாடப்படும்.