தேனி மாவட்டம், கம்பம் நகருக்குள் சனிக்கிழமை அரிக்கொம்பன் காட்டு யானை நுழைந்ததால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சுருளிபட்டியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் யானையை பிடிக்க கும்கி யானை கம்பம் வரவழைக்கப்பட்டுள்ளது.
கம்பம் நகரில் சுற்றித்திரியும் அரிக்கொம்பன் யானை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் இடம்பெயர்ந்து இன்று காலை சுருளிப்பட்டியில் உள்ள தோப்பில் முகாமிட்டுள்ளது. மேலும், கம்பம்மெட்டு வழியாக கேரளத்துக்குச் செல்லும் மலைச் சாலை அடைக்கப்பட்டது.
கேரளா மாநிலம் மூணாறு பகுதி மக்களை பயமுறுத்தியும், 20 பேரை கொன்ற அரிக்கொம்பன் என அழைக்கபடும் காட்டுயானையின் அட்டகாசம் அதிகரித்ததினால் அச்சமடைந்த பொதுமக்கள் பலகட்ட போராட்டத்திற்கு பின்னர் யானை பிடிக்கபட்டு, தமிழ்நாடு – கேரளா எல்லை பகுதியில் மங்களதேவி கண்ணகி கோவில் வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது.
அரிக்கொம்பன் யானை, தற்போது மீண்டும் தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்துள்ளது. இந்த யானை இதுவரை 18 பேரை கொன்றுள்ளதால், நேற்று திடீரென யானை மீண்டும் குடியிருப்பு பகுதியில் புகுந்ததால் மக்கள் அச்சமடைந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
வனத்துறையினர் யானையை பின் தொடர்ந்தபடியே பொதுமக்களை பாதுகாப்பாக இருக்குமாறு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். இதனையடுத்து யானையின் நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு கருதி கம்பம் பகுதியில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. சுருளிப்பட்டியில் உள்ள தோப்பில் சுற்றித்திரியம் அரிக்கொம்பன் யானையை வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க 3 கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
