மெட்ராஸ் டே

செய்திகள்

சென்னைக்கு வயது 382. சென்னை, அப்படித் தான் நாம் அனைவரும் அறிவோம், நம் மாநிலத்தின் தலைநகராக, அதிகார மையங்களின் குவியலாக, பல்வேறு வாய்ப்புகளின் களஞ்சியமாக, பலதரப்பட்ட மக்களை சுமந்து நிற்கும் சென்னை தான் முன்பு மெட்ராஸ் என அழைக்கப்பட்டிருந்தது. மெட்ராஸ் என்னும் சொல்லை 1500களில் அங்கு ஆக்கிரமித்து துறைமுகம் கட்டிய போர்த்துகீசியர்கள் உருவாக்கிய சொல்லாகும். ஆனால் இன்று இருக்கும் சென்னை உருவாகிட அடித்தளமாக அமைந்த நிகழ்வு கி.பி. 1639ஆம் ஆண்டு நிகழ்ந்தது.

கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ் டே, ஆண்ட்ரூ கோகன் ஆகிய இருவரும், இன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டை இருக்கும் இடத்தை அய்யப்பன் நாயக்கர் மற்றும் வேங்கடப்பன் ஆகிய இருவரிடமிருந்து விலைக்கு வாங்கினர். அவர்களது தந்தை தான் சென்னப்ப நாயக்கர். அந்த நிலத்தை ஒட்டியிருந்த பகுதியை சென்னப்பட்டினம் என்று அழைத்து வந்திருந்தனர். இருந்த போதும் போர்த்துகீசியர்கள் வழங்கிய பெயரே நிலைத்திருந்தது. பின்னர் அதைச் சுற்றியிருந்த நிலங்களும் கிழக்கிந்திய கம்பெனி கைவசம் வந்திருந்தது.

கிழக்கிந்திய கம்பெனி விலைக்கு வாங்கியது முதல் தான் மதராசப்பட்டினம் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டது. கிழக்கிந்திய கம்பெனியின் ராபர்ட் க்ளைவ் தனது ராணுவத் தளமாக மதராஸ் நகரைத் தேர்ந்தெடுத்திருந்தார். பிரிட்டிஷ் அரசின் நான்கு இந்தியக் குடியிருப்புப் பகுதிகளில் ஒன்றாக சென்னையும் திகழ்ந்து மெட்ராஸ் மாகாணம் எனப் பெயர் பெற்றது. அதற்குப் பின்னரான சுதந்திர இந்தியாவில் மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னும் மெட்ராஸ் மாகாணம் எனவே தமிழ்நாடு அறியப்பட்டு வந்தது. 1969 ஆண்டு இது மாற்றம் செய்யப்பட்டு தமிழ்நாடு என நமது மாநிலத்தின் பெயர் உருவான போது, மெட்ராஸ் மற்றும் சென்னை என இரண்டு பெயர்களும் அங்குள்ள மக்களிடம் உபயோகத்தில் இருந்து வந்தது.

1996ஆம் ஆண்டு ஜூலை மாதம் இது சென்னை என தமிழக அரசாங்கத்தால் அதிகாரபூர்வமாக பெயர்மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி, அந்த மாநகரின் உதயத்தை ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடும் வகையில் ஒரு குழு அமைத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. சாதிக்கும், சாதிக்க விரும்பும் எவரும் சென்னையை தங்கள் வாழ்வின் ஒரு முறையேனும் தரிசிக்காமல் கடந்துவிடுவதில்லை. இப்படியாக அனைத்திற்குமான மையப்புள்ளியான மெட்ரோபோலிட்டன் மாநகரான சென்னை தான் நம் நாட்டில் முதன் முதலில் உருவான நகரம் என்னும் பெருமையைக் கொண்டிருப்பது கூடுதல் சிறப்பாகும். சென்னையைக் கொண்டாடுவோம். வரலாற்றைப் போற்றுவோம்.

Leave a Reply

Your email address will not be published.