தமிழகத்தில் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு பெயர்களும் உண்டு, சிறப்புகளும் உண்டு. மதுரை மாநகரம் தமிழகத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்றாகும். பாண்டிய மன்னர்களால் ஆளப்பட்ட இந்நகரத்திற்கு பல சிறப்புகள் உண்டு. தமிழை வளர்ப்பதற்காக மூன்றுச் சங்கங்கள் பாண்டிய மன்னர்களால் உருவாக்கப்பட்டது என்பது வரலாறு. இந்நகரத்தை தூங்கா நகரம் என்றும் அழைப்பர். உலகப் புகழ்ப் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயில் இந்நகரில் தான் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாநகரில் தான் தமிழகத்திலேயே அதிகப்படியான திருவிழாக்கள், கோயில் பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதில் மிகவும் சிறப்பு வாய்ந்த, உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா தான் மிக மிக முக்கியமான திருவிழாவாகும். அந்த சித்திரைத் திருவிழாவில் மிக முக்கியமான நிகழ்வு கள்ளழகர் வைகையாற்றில் தங்க குதிரையில் இறங்கும் வைபவம். இதற்கு மிக சுவாரஸ்யமான ஓர் கதையும் உண்டு. சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் கிட்டத்தட்ட 15 நாட்களுக்கும் மேலாக நடக்கும் ஓர் மிகப் பெரிய திருவிழா. ஒவ்வொரு நாளும் சொக்கநாதரும், மீனாட்சியும் ஒவ்வொரு வாகனத்தில் வீதியுலா வருவர்.
திருவிழாவின் 8ஆம் நாள் அன்னை மீனாட்சி, சொக்கநாதருக்கும் பட்டாபிஷேகம் நடைபெறும். 10ஆம் நாள் நடக்கும் மீனாட்சி, சொக்கநாதர் திருக்கல்யாணம் தான் இத்திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்வு. அன்றைய தினம் மீனாட்சியம்மன் திருக்கோயிலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதும். இந்த திருக்கல்யாணத்தைக் காண தான் கள்ளழகர் தன் இருப்பிடமான பழமுதிர்சோலை மலை அழகர் கோயிலிலிருந்து புறப்படுவார். திருக்கல்யாணம் ஆன மறுநாள் மீனாட்சி சொக்கநாதர் தேரோட்டம் நடைபெறும். மதுரை மாநகரமே விழாக்கோலம் கொண்டிருக்கும்.
திருக்கல்யாணத்திற்கு வந்து சேரவேண்டிய அழகர் வழிநெடுகும் கிடைக்கும் உற்சாக வரவேற்பால் மகிழ்ந்து தல்லாக்குளத்தில் எதிர்சேவையென காலம் தாமதமாகி மதுரை மாநகரின் எல்லையை வந்தடைவார். அவ்வாறு வந்தடையும் அழகருக்கு, தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணம் முடிந்துவிட்டது என்ற செய்தியறிய, தான் பங்குகொள்ளாமல் திருக்கல்யாணம் எப்படி நிகழும் எனக் கோபம் கொண்டு வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு அடுத்த தினம் நடைபெறும். பச்சைப் பட்டுடுத்தி, பொன் குதிரையில் அழகர் பவனி வந்து வைகையாற்றில் எழுந்தருள்வார். இக்காட்சியைக் காண வைகையை கூடும் மக்களால் அன்றைய தினம் ஆறு முழுவதும் மனிதத் தலைகளாக மட்டும் காணும்.
வைகையாற்றில் எழுந்தருளியப் பின் அழகர் மீண்டும் மலைக்குச் செல்லும் நிகழ்வு நடைபெறும். வண்டியூரில் தரிசனம் தந்து, பின்னர் தசாவதார நிகழ்ச்சி அன்றிரவு நடந்து பின்னர் அழகர் கோயிலை அடைவார்.
இவ்வாறு இத்திருவிழாவை மதுரை மக்கள் மட்டுமல்லாமல் உலகத் தமிழர்கள் அனைவருமே எதிர்பார்த்துக் காத்திருப்பர்.