தமிழகத்தின் ஒப்பில்லா கவிஞன், விடுதலைப் போராட்ட வீரர் மகாகவி பாரதியார் நினைவு தினம் இன்று. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் 1882ம் ஆண்டு பிறந்தார். இவர் கவிஞர் மட்டுமல்ல, சிறந்த எழுத்தாளர், பத்திரிக்கை ஆசிரியரும்கூட. இவருடைய கவிதை வரிகள், பாடல் வரிகள் இன்றளவும் பிரபலம். பல நேரங்களில் அது நமக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் இருக்கும்.
பாரதியார் எழுதிய கண்ணன் பாட்டு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் போன்ற நூல்கள் மக்களிடையே இன்றும் பிரபலம். பாரதியாரின் மிகக் கூர்மையான வரிகள் அன்றையக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை பதம்பார்த்தது. இவரின் வரிகள் பல நேரங்களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
.பாரதியாரின் “பாருக்குள்ளே நல்ல நாடு, எங்க பாரத நாடு” “யாம் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழிப் போல் இனிதாவது எங்கும் காணோம்” “வெள்ளை நிறத்தொருப் பூனை எங்கள் வீட்டில் வளருதுக் காணீர்” போன்ற வரிகள் மொழிப் பற்று, தேசப்பற்று, சமூக சிந்தனை, ஏற்றத்தாழ்வு இல்லாத ஓர் சமூகநீதிப் பார்வை போன்றவைகளை நமக்கு உணர்த்தும்.
1949ம் ஆண்டு பாரதியாரின் அனைத்து படப்புகளையும் தமிழக அரசு நாட்டுடைமை ஆக்கியது. தமிழகத்தில் ஒருவரது படைப்புகளை முதன்முதலில் நாட்டுடைமை ஆக்கப்பட்டது என்றால் அது பாரதியாரின் படைப்புகள் தான். பாரதியார் 1921ம் ஆண்டு செப்டம்பர் 11ம் நாள் திருவல்லிக்கேணி கோயில் யானை தாக்கியதில் உடல்நலம்குன்றி இறந்தார். அப்போது அவருக்கு வயது 38.
பாரதியார் பிறந்த எட்டயபுரம் வீடு, திருவல்லிக்கேணி வீடு, புதுவையில் அவர் வாழ்ந்த வீடு அனைத்தும் மாநில அரசுகளால் பராமரிக்கப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.