சபரிமலையில் மகரஜோதி தரிசனம் – பக்தி பரவசத்துடன் தரிசித்த ஐயப்ப பக்தர்கள்

ஆன்மீக தளங்கள் ஆன்மீகம் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் கோயில்கள் செய்திகள் தமிழ்நாடு நிகழ்வுகள்

சபரிமலையில் பொன்னம்பல மேட்டியில், மகர ஜோதி தெரிந்தது. இதனை தரிசிப்பதற்காக 1 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்படன் கோயிலில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை கடந்த நவம்பர் 16-ம் தேதி திறக்கப்பட்டது. அன்று முதல் சபரிமலையில் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
மண்டல காலத்தில் தினமும் சராசரியாக 80 ஆயிரம் முதல் 85 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனம் செய்து வந்தனர். ஆனால் மகரவிளக்கு காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து தினமும் சராசரியாக 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் சபரிமலையில் குவிந்தனர். இந்நிலையில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜையும், மகரஜோதி தரிசனமும் 14ம் தேதி நடைபெற்றது.
இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. அதிகாலையிலேயே ஐயப்பனை தரிசிப்பதற்காக நேற்று இரவு முதலே பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். 3.30 மணிக்கு தொடங்கிய நெய்யபிஷேகம் காலை 11.30 மணி வரை நடைபெற்றது. தொடர்ந்து கலச பூஜை, களபாபிஷேகம் ஆகியவற்றுக்குப் பின்னர் 1.30 மணிக்கு நடை சாத்தப்பட்டது. மீண்டும் மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
இதற்கிடையே பந்தளத்தில் இருந்து புறப்பட்ட திருவாபரண ஊர்வலம் மாலை 5 மணியளவில் சரங்குத்தியை அடைந்தது. சரங்குத்தியில் ஊர்வலத்திற்கு வரவேற்பு அளிக்கப்பட்ட பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடைந்தது. பின் திருவாபரணம் ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
இந்த சமயத்தில் பொன்னம்பலமேட்டில் மூன்று முறை மகரஜோதிதெரிந்தது. இதன்பின் இரவு 8.45 மணியளவில் பிரசித்தி பெற்ற மகரசங்கரம பூஜை நடைபெறும். இந்த பூஜையின் போது திருவிதாங்கூர் அரண்மனையில் இருந்து கொடுத்து அனுப்பப்படும் நெய் மூலம் ஐயப்பனுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படும். தொடர்ந்து இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *